டிக்டாக் மற்றும் யூடியூப் போன்றவற்றின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் வருமானம் குறைந்துள்ளதை தொடர்ந்து, மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியை விட, பேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Also Read: Meta: ஃபேஸ்புக் நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்… என்ன காரணம்?
89 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும், 90 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு கெளதம் அதானி 10-வது இடத்திலும் உள்ள நிலையில், 85 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.
சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தனது 18 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக டெய்லி ஆக்டிவ் யூசர்ஸ் (DAUs – Daily Active Users) எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது. அதாவது, முந்தைய காலாண்டில் 1.930 பில்லியனாக இருந்த ஃபேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை, டிசம்பர் இறுதி மூன்று மாதங்களில் 1.929 பில்லியனாக சரிந்தது, மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற வர்த்தகத்துக்கு பிந்தைய வர்த்தகத்தில் மெட்டாவின் பங்குகள் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சரிந்து, நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பில் சுமார் $200 பில்லியன் (£147.5பில்லியன்) வீழ்ச்சியை கண்டது.
Also Read: 18 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாகச் சரிந்த Facebook பயனாளர்கள் எண்ணிக்கை; என்ன காரணம்?
இளைய பயனர்கள் செயலியை விட்டு வெளியேறியதே, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை பாதித்ததாகவும், ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களும் குறைந்துள்ளதால் இந்த சரிவை கண்டதாகவும் கூறப்பட்டது. டிக் டாக் வேகமாக வளர்ந்து வருவது ஃபேஸ்புக்கை பாதித்துள்ள நிலையில், மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.