
அந்த நிலை பொக்கிஷம் – அமலா
தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள படம் ‛கணம்'. ஷர்வானந்த், ரீத்து வர்மா, அமலா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகார்த்திக் இயக்கி உள்ளார். அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. 'கணம்' படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர்.
'கணம்' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குக் கிடைத்த பெருமையாக உணர்கிறேன். நிஜ வாழ்விலும் நான் ஒரு தாய். அந்த நிலையை பொக்கிஷமாகக் கருதுகிறேன். படத்தை முடிக்கும் வரை எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன்'' என்கிறார்.