நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனுக்கு அருகிலுள்ள யூனியன் சதுக்கத்தில் 8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு இந்திய தூரகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாசகார செயலை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது என்று நியூயார்க் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
காந்தி சிலை சேத சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடி விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக இந்திய தூரதக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி மெமோரியல் சர்வதேச அறக்கட்டளையால் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி எட்டடி உயரமுள்ள சிலை நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காந்தி சிலை சிலரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம், இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்…மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது