அரசுக்கு நிலம் வழங்கிய அடூர் கோபாலகிருஷ்ணன்
இந்தியாவிலேயே 16 தேசிய விருதுகள் பெற்ற ஒரே இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் அத்தனையும் விருதுகளை குவித்த படங்கள். எலி பத்தாயம், நாலு பெண்ணுகள், சுயம்வரம், மதிலுகள் உட்பட பல புகழ்பெற்றத் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள அரசு தற்போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதனால் தேவைக்கு அதிகமாக நிலம் உள்ளவர்கள், அந்த நிலத்தை ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனும், மாநில அமைச்சர் கோவிந்தனும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து, தனது சொந்த ஊரான அடூரில் உள்ள பூர்வீக நிலத்தில், 13.5 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்க அடூர் கோபாலகிருஷ்ணன் முன் வந்துள்ளார். இது தொடர்பாக, அமைச்சர் கோவிந்தனை சந்தித்து நிலம் தொடர்பான டாக்குமெண்டுகளை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட கோவிந்தன், அடூரின் இந்த செயல் நாட்டுக்கே முன்மாதிரியானது என்று தெரிவித்துள்ளார்.