நைபிடாவ்:மியான்மரில் கடந்த, 2021 பிப்.,1ல் ராணுவ புரட்சி நடந்தது. ஜனநாயக தேசிய லீக் அரசை அகற்றி விட்டு ராணுவம் ஆட்சி அமைத்தது. இதையடுத்து ஜனநாயக தேசிய லீக் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ராணுவம் அடக்கியது. அத்துடன், ஆங் சான் சூச்சி மீது, அரசு ரகசியங்களை வெளியிட்டது உட்பட பல வழக்குகள் தொடரப்பட்டன.இதில் கொரோனா பரவல் தடுப்பு விதிமீறியது, அனுமதியின்றி அன்னிய தொலைதொடர்பு சாதனங்களை வைத்திருந்தது தொடர்பான வழக்குகளில், ஆங் சான் சூச்சிக்கு, 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆங் சான் சூச்சி மீது லஞ்சம் வாங்கியதாக ராணுவம் மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. இது, அவர் மீது தொடரப்பட்டுள்ள, 11வது வழக்காகும். இதில் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
இதற்கிடையே, உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, மியான்மரில் 2023ல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, ராணுவம் அறிவித்துள்ளது. இதில் ஆங் சான் சூச்சி பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகளை ராணுவம் தொடுத்து வருகிறது.
Advertisement