புதுடெல்லி:
இந்தியா மூன்று புறமும் கடல்களால் சூழப்பட்ட தீபகற்பம்.
இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபி கடல் என 3 கடல்களும் இந்தியாவின் அரண்களாக உள்ளன. கடலால் சூழப்பட்ட இந்தியாவின் கடற்கரைகள் அனைத்தும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளாகும்.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நகர்புறத்தில் உள்ள 2-வது நீண்ட கடற்கரை என்ற சிறப்பு கொண்டது. இதுபோல கோவா, கேரள மாநிலங்களிலும் பல அழகிய கடற்கரைகள் உள்ளன.
இந்த கடற்கரை பகுதிகள் அனைத்திலும் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
கடல் உள்வாங்குவது, நீர் மட்டம் உயர்வது மற்றும் தாழ்வது,அலைகள் திடீரென அதிக சீற்றத்துடன் காணப்படுவது, கடல் கொந்தளிப்பு போன்றவை ஏற்படுகிறது. இது குறித்து தேசிய கடற்கரை ஆய்வு மையம் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது.

இது தொடர்பான ஆய்வு அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இது தொடர்பாக மத்திய புவிசார் அறிவியல் துறை மந்திரி ஜிதேந்தர் சிங் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில் கூறியிருப்பதாவது:-
இந்திய கடற்கரை பகுதிகள் அனைத்தும் 1990-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை செயற்கை கோள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள கடற்கரையின் மூன்றில் ஒரு பகுதி கடலரிப்பால் சேதம் அடைந்துள்ளது.அதாவது இந்திய கடற்கரையின் 33.6 சதவிகித கடற்பரப்பு பல்வேறு விதத்தில் அழிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதற்காக இந்திய தேசிய ஆழ்கடல் தகவல் சேவை மையம் கடற்கரை பாதிப்பு குறியீட்டை மையப்படுத்தி ஒரு வரைபடத்துடன் கூடிய தகவல் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டு மொத்த கடற்கரையின் தகவல்களையும் துல்லியமாக தரக் கூடியதாய் அந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கடல் நீர்மட்ட உயர்வு, கடற்கரை உயரம், அதன் புவியியல் அமைப்பு, அலைகளின் உயரம் முதலானவைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் கிட்டத்தட்ட 124 கிலோ மீட்டர் கடற்கரை பகுதிகள் மிக அதிக கடலரிப்பை சந்தித்துள்ளதாக தெரிகிறது. இது நாட்டில் இருக்கிற ஒட்டுமொத்த கடற்கரைப் பரப்பில் 5.3 சதவீதமாக இருக்கிறது.
மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக பட்சமாக தமிழ்நாட்டில் 65 கிலோ மீட்டர் கடற்கரை அதாவது மாநிலத்தின் மொத்த கடற்கரையில் 6.3 சதவீதம் பாதிப்பை சந்தித்துள்ளது.
மேற்குவங்கத்தில் 49 கிலோ மீட்டரும் (2.56%) கர்நாடகாவில் 48 கிலோ மீட்டரும் (9.54%) ஒடிசாவில் 37 கிலோ மீட்டரும் (7.51%) அந்தமான் தீவுகளில் 24 கிலோ மீட்டரும் (0.96%)
கேரளத்தில் 15 கிலோ மீட்டரும் (2.39%) நிக்கோபார் தீவுகளில் 8 கிலோ மீட்டரும் (0.97%) மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 6 கிலோ மீட்டரும் (0.55%) பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பாக புவிசார் அறிவியல் துறை அமைச்சகமும் அதன் துறைகளும் மாநில அரசுகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
மேலும் கடலரிப்பினை எதிர்கொள்வதற்கான தொழில் நுட்ப தீர்வுகளையும் அறிவுரைகளையும் மாநில அரசுகளுக்கு வழங்கி வருவதாக மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… நீட் தேர்வு விவகாரம் – மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்