வறுமையில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்றி அவர்களின் வாழ்வை மேம்பட செய்யும் திறன் விவசாயத்துக்கு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “டிஜிட்டல் விவசாயம்தான் இந்தியாவின் எதிர்காலம். இளைஞர்கள் இதற்கு பெருமளவில் பங்களிக்கலாம்.
அமிர்த காலத்தில் விவசாயத்தின் வளர்ச்சி மூலம் அனைவருக்குமான வளர்ச்சி மீது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத்தில் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
நீர் பாதுகாப்பு மற்றும் நதிநீர் இணைப்பு மூலம் நீர் பாசனத்தின் கீழ் ஏராளமான நிலங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதே சமயம், நுண்ணீர் பாசனம் மூலம் தண்ணீரை திறமையாக பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் குறித்து உலகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை.
சிறு விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பாமாயில் உற்பத்தி பரப்பளவை 6 லட்சம் ஹெக்டேர் உயர்த்துவதன் மூலம் சமையல் எண்ணெயில் தன்னிறைவை எட்ட வேண்டும். இதனால் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள்” என்று தெரிவித்தார்.