எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல்வாதிகள் அண்மையில் மிக இரகசியமான முறையில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக எதிர்வரும் 10 ஆம் திகதியும் இரகசிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த இரகசிய பேச்சுவார்த்தையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, இணையத்தளம் ஊடாக பேச்சுவார்த்தை பங்கேற்றுள்ளார்.
இவர்களை தவிர பேச்சுவார்த்தையில் விரிவுரையாளர்களாக கலாநிதி சாந்த தேவராஜன், கலாநிதி ரொஷான் பெரேரா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி நிஷான் டி மெல்,கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் ஆகியோரும் கலந்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இந்த பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.