ஆன்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை பைனலில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது இந்தியா. நேற்று நடந்த பைனலில் இங்கிலாந்தை 4 விக்கெட்டில் வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீசில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 14வது சீசன் நடந்தது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பிரஸ்ட், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
ராஜ் அசத்தல்
இங்கிலாந்து அணிக்கு ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல் ஜோடி துவக்கம் தந்தது. ரவிக்குமார் ‘வேகத்தில்’ ஜேக்கப் (2) சிக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், கேப்டன் டாம் பிரஸ்ட்டை (0) போல்டாக்கினார். ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய ராஜ் பாவா, இந்தியாவுக்கு தொல்லை தந்த ஜார்ஜ் தாமசின் (27) ரன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து அசத்திய இவர், 13வது ஓவரின் கடைசி இரு பந்தில் வில்லியம் (4), ஜார்ஜ் பெல்லை (0) வெளியேற்றினார். மீண்டும் மிரட்டிய ராஜ் பாவா, ரேஹன் அகமதுவை (10) அவுட்டாக்க, இங்கிலாந்து அணி 61/6 ரன் என திணறியது.
ரவிக்குமார் அபாரம்
அலெக்ஸ் (10) விரைவில் கிளம்பினார். பொறுப்பாக ஆடிய ஜேம்ஸ் ரெவ், 79 பந்தில் அரைசதம் அடித்தார். இந்நிலையில் 44வது ஓவரை வீசிய ரவிக்குமார், ஜேம்ஸ் ரெவ் (95), ஆஸ்பின்வாலை (0) அவுட்டாக்கினார். ராஜ் பாவா ‘வேகத்தில்’ ஜோஷுவா பாய்டன் (1) வெளியேறினார்.
இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 189 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் சேல்ஸ் (34) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ராஜ் பாவா 5, ரவிக்குமார் 4 விக்கெட் கைப்பற்றினர்.
ரஷீத் அரைசதம்
இந்திய அணிக்கு ரகுவன்ஷி, ஹர்னுார் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. 2வது பந்தில் ரகுவன்ஷி (0) அவுட்டானார். ஹர்னுார், துணைக் கேப்டன் ரஷீத் இணைந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்னுார் 21 ரன்னில் அவுட்டாக இந்திய அணி 17.3 ஓவரில் 49/2 ரன் மட்டும் எடுத்தது.
சற்று வேகம் காட்டிய ரஷீத், அரைசதம் அடித்தார். 3 வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த போது, ரஷீத் (50) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் கேப்டன் யாஷ் துல் (17) வெளியேற சற்று பதட்டம் ஏற்பட்டது. பின் நிஷாந்த், ராஜ் பாவா இணைந்து அணியை மீட்டனர். ரேகன் பந்துகளில், ராஜ் பாவா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றியை நெருங்கியது. இந்நிலையில் ராஜ் பாவா (35), டாம்பே (1) அவுட்டாகினர்.
ஜூனியர் ‘உலக’ அரங்கில் முதல் அரைசதம் எட்டினார் நிஷாந்த். மறுபக்கம் தினேஷ் பானா அடுத்தடுத்து இரு சிக்சர் அடிக்க இந்திய அணி 47.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. 4 விக்கெட்டில் வெற்றி பெற்ற இளம் இந்தியா, 5வது முறையாக உலக கோப்பை வென்றது. நிஷாந்த் (50), தினேஷ் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
‘ஜூனியர்’ உலக கோப்பை தொடரில் 8 வது முறையாக பைனலில் மோதிய இந்திய அணி , 5வது கோப்பை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றது.
* ஆஸ்திரேலியா 3 (1988, 2002, 2010), பாகிஸ்தான் 2 (2004, 2006), இங்கிலாந்து (1998), தென் ஆப்ரிக்கா (2014), விண்டீஸ் (2016), வங்கதேச (2020) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
தோனி மாதிரி
கடந்த 2011ல் மும்பையில் நடந்த உலக கோப்பை பைனலில் இந்தியா, இலங்கை மோதின. கடைசி 11 பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் கேப்டன் தோனி, சிக்சர் அடித்து இந்தியாவுக்கு இரண்டாவது உலக கோப்பை வென்று தந்தார்.
நேற்று இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் 12 பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில் இந்தியாவின் தினேஷ் பானா, அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்து இளம் இந்தியாவுக்கு 5 வது கோப்பை வென்று தந்தார். இது அப்படியே தோனியை நினைவுபடுத்தியது.
சிறந்த பந்துவீச்சு
‘
வேகத்தில்’ அசத்திய இந்தியாவின் ராஜ்
பாவா, 9.5 ஓவரில், 31 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஜூனியர் உலக கோப்பை பைனலில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2006ல் இந்தியாவுக்கு எதிரான பைனலில் (கொழும்பு) பாகிஸ்தானின் அன்வர் அலி, 9 ஓவரில், 35 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
ஆஸி., ‘நம்பர்-3’
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ‘பேட்’ செய்த ஆப்கானிஸ்தான் 49.2 ஓவரில் 201 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆஸ்திரேலிய அணிக்கு கெல்லாவே (51), ராதாகிருஷ்ணன் (66) கைகொடுக்க, 49.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3வது இடம் பிடித்தது.