தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறப்பு. வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி மாலை மணிக்கு திறந்து வைக்க உள்ள ராமானுஜர் சிலை சமத்துவ சிலை என அழைக்கப்படுகிறது. சிலை திறப்பிற்கான பூஜையில் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநில வேத பண்டிதர்களும் பங்கேற்கின்றனர். இங்கு கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை லட்சுமி நாராயண யாகம் நடைபெறுகிறது. அந்த விழா ஏற்பாடுகளை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். கம்பீரமான ராமானுஜரின் பஞ்ச லோக சிலை மற்றும் ஆசிரமத்தின் சுற்றுப்புறம் முழுவதும் இரவில் மின்னும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் இரவு 7 மணிக்கு ராமானுஜரின் சிலை மீது ஸ்வீடன் நாட்டின் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘லேசர் ஷோ’வின் விளக்கொளியில் அங்கு வரும் பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 187 அடி தூரத்தில் புரொஜக்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிவரும் ஒளியை பொருத்து சங்கீதமும் ஒலிக்கும் வகையில் இந்த ‘லேசர் ஷோ’ வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், விழா நடைபெறும் ஆசிரமம் மற்றும் விமான நிலையம், ஆசிரமத்திற்கான வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.