சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி டோஹா ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே, குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 655 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அவர் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு பிரிவிற்கு சென்று, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த குடிவரவு – குடியகழ்வு அதிகாரியிடம் அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் இத்தாலிக்கான வதிவிட வீசா சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டமையால் குறித்த அதிகாரி அதனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.