உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், விடுதிக்கு வந்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரின் ‘சூட்கேஸ்’ பெட்டிக்குள், அவரது காதலியான மாணவி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உடுப்பி மாவட்டம் மணிபால் அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கியுள்ளனர். சமீபத்தில் அவர்களில் ஒருவர் மிகப்பெரிய சூட்கேஸ் உடன் விடுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து, அதில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். ‘ஆன்லைன்’ வாயிலாக ‘ஆர்டர்’ செய்த பொருட்கள் இருப்பதாக மாணவர் கூறி உள்ளார்.
இருப்பினும், சந்தேகம் தீராத காவலர்கள் சூட்கேசை திறந்தபோது, அதற்குள் இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே வந்தார்.விசாரணையில், அதே கல்லுாரியின் சக மாணவியான தன் காதலியை விடுதி அறைக்கு அழைத்து செல்ல, இந்த அதிரடி நடவடிக்கையில் மாணவர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
Advertisement