வாஷிங்டன்:
தங்கம் விற்கிற விலையில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணக்காரர்களே வாயைப் பிளக்கும் அளவிற்கு அமெரிக்காவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த நிக்லஸ் காஸ்டெல்லோ (43) என்ற கலைஞர் ஒரு தங்க கன சதுரத்தை வடிமமைத்துள்ளார். இவர் காஸ்டெல்லோ காயின் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்துவதற்காக இந்த தங்க கன சதுரத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த தங்கக்கட்டியை சுமார் 410 பவுண்டு எடையில் 24 கேரட் சுத்தமான தங்கத்தில் வடிவமைத்து நியூயார்க்கின் சென்ட்ரல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக்கட்டியின் மொத்த மதிப்பு 11.7 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், இதை உருவாக்க 4,500 மணி நேரத்திற்கும் மேலானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் ஒரு தூய பொருளாக வார்க்கப்பட்டதில்லை என நிக்லஸ் காஸ்டெல்லோ தெரிவித்துள்ளார்.
பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட தங்கக்கட்டியை அப்பகுதி மக்கள் பார்த்து வருகின்றனர். மேலும், பூங்காவில் இந்த தங்கக்கட்டியை பாதுக்காக்க ஒரு சிறப்பு பாதுகாப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…டெல்லி பயணம்: மோடி-அமித்ஷாவை கவர்னர் ரவி சந்திக்கிறார்