பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஜனவரி 5-ல் பஞ்சாப் மாநிலம் சென்றபோது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் அங்கிருந்து திரும்பினார். இது குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்தப் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அவரது கண்டனத்தை விமர்சிக்கும் வகையில் சித்தார்த் ட்வீட் ஒன்று செய்திருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் தரக்குறைவானது என்று பெரும் சர்ச்சைக் கிளம்பியது. பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு சாய்னா நேவால் குறித்தான தனது ட்வீட்க்கு மன்னிப்புக் கேட்டிருந்தார் நடிகர் சித்தார்த்.
அதன்பின், தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த்தின் ட்வீட்டைக் கண்டித்து அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்குமாறு கேட்டிருந்தது. மேலும் அவரது தரக்குறைவான கருத்துக்கு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி நடிகர் சித்தார்த் காவல்நிலையத்தில் காணொலி மூலம் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும் அப்போது தன்னுடைய தரக்குறைவானக் கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.