ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அமீரை சந்தித்து அண்மையில் உரையாடினார்.
நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.
உங்களின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
“பொதுவாக என் குடும்பத்தை பற்றி வெளியே பேசுவதில்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டோ விமர்சனமோ அவர்களின் மீது விழக்கூடாது என்பதுதான் இதற்கான காரணம். முன்பு என் வீட்டில் பல்வேறு பத்திரிகைகளை நான் வாங்குவதுண்டு. ஆனால் பருத்திவீரனுக்கு பின்னால் அதில் வரும் சர்ச்சைகள் விமர்சனங்களால் அவற்றை நிறுத்திவிட்டேன். மேலும் யூ-டியூப்பில் நான் பேசும் அரசியல் சார்ந்த நேர்காணல்கள் வெளியாகும் போதும் சரி, அதில் வரும் கமென்ட்டுகளை படிக்க வேண்டாம் என்றுதான் என் குடும்பத்தினரிடம் சொல்வேன். நான் இவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும் அவர்களுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. வடசென்னை வெளியானபோது நான் ஆண்ட்ரியாவுடன் நடித்த காட்சிகளால் என் மகனை உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் மிகவும் கிண்டலடித்துள்ளனர்.
நான் வளர்ந்த சூழலும் என் மகன் வளர்ந்த சூழலும் முற்றிலும் வேறானது. அதை எதிர்கொள்ள முடியாத அவன் தன் தலைமை ஆசிரியரிடம் சென்று அழுது முறையிட்டு இருக்கிறான். “பிறருக்கு வேண்டுமானால் அவர் நடிகராக இருக்கலாம் ஆனால் எனக்கு அவர் அப்பா. அவரை கிண்டல் செய்யட்டும். ஆனால் என் முன்னே வேண்டுமென்றே வந்து செய்வது ஏன்?” இவ்வாறு அவன் கேட்டுள்ளான். இவை அனைத்தையும் அந்த ஆசிரியர் என்னை அழைத்து கூறுகிறார். மேலும் அவரே என் மகனுக்கு அறிவுரையும் அளிக்கிறார். “பிரபலங்களின் பிள்ளைகள் இது மாதிரியான விஷயங்களை சந்திக்காமல் இருக்கவே முடியாது. அவற்றை எதிர்கொண்டு கடந்து போக நீதான் பழகிக்கொள்ள வேண்டும்” என்றார். இதுதான் நான் சொல்லும் காரணம். எனக்கு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன் அவ்வளவுதான் சொல்லுவேன். இந்த ஆடம்பரத்தில் அவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் என் எண்ணம்.”
நிறைவு கேள்வியாக இன்றைய சினிமா, இன்றைய அரசியல் பற்றி அமீரின் கருத்து?
“இரண்டுமே வணிகம் சார்ந்தது. பணமில்லாமல் வெற்றியில்லாமல் சினிமா கிடையாது. பணமில்லாமல் அரசியலே கிடையாது. நான் முன் சொன்னது போலத்தான் ஒரு கலை சந்தைக்கு வந்த பின்பும் அதன் கலைத்தன்மையை பற்றி மட்டும் பேசினால் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். எப்போது வாக்குக்கு பணம் கொடுக்கப்பட தொடங்கப்பட்டதோ அப்போதே அரசியல் வணிகமாகிவிட்டது.
என்னுடைய பருத்திவீரனுக்கு பெர்லின் திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இயக்குநராக எனக்கு ஒரு மாநில விருதுக்கூட கிடைக்கவில்லை. சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், குணச்சித்திர நடிகர் ஆகிய அனைத்தையும் வென்றது. ஆனால் இயக்குநரான எனக்கு மட்டும் எதுவும் கிடைக்கவில்லை. இவ்விடத்தில் பார்க்கவேண்டியது கலையையா, அரசியலையா? எனக்கு அவ்விருது கிடைக்காதது குறித்து ஒரு நாளும் வருத்தப்பட்டது கிடையாது. அதே வருடத்தில் இது மாதிரியான மற்றுமொரு சம்பவமும் நடந்தது…”
அமீர் சந்தித்த அந்த நிகழ்வு என்ன? விகடன் வழங்கும் சினிமா மதிப்பெண் குறித்த அவரின் கருத்து என்ன? கீழுள்ள வீடியோவில் முழுமையாகக் காணுங்கள்.