வாஷிங்டன் :
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து ஆதரிப்போம்.
சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் வளமை, பாதுகாப்பு கருதி, எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கு துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனா, பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. அதற்கு ஒலிம்பிக் தீபம் ஏந்திச்செல்ல குய் பபோவா என்ற ராணுவ அதிகாரியை தேர்ந்தெடுத்துள்ளது.
அவர், கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்திய சீன ராணுவ படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தவர். அதனால் அவரை தேர்வு செய்ததற்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 2 பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்கோ ருபியோ என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-
பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா அரசியல் ஆக்குவதை நிரூபிக்க மற்றொரு உதாரணம் கிடைத்துள்ளது. இந்திய படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியை தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. திட்டமிட்டே ஆத்திரத்தை தூண்டுவதாக உள்ளது. இதில் இந்தியாவுக்கு துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜிம் ரிஸ்ச் என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவரை ஒலிம்பிக் தீபம் ஏந்த சீனா தேர்வு செய்திருப்பது வெட்கக்கேடானது.
உய்குர் இனத்தினருக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்து வருகிறது. அவர்களின் விடுதலைக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஆதரவாக அமெரிக்கா செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.