புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான திருத்தப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்பின் அனந்த்பூர் சாகிப் தொகுதி காங்கிரஸ் எம்பியாக மணீஷ் திவாரி ஆவார். சமீபத்தில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து, கட்சியின் 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். ஜி-23 என அழைக்கப்படும் இந்த தலைவர்களில் மணீஷ் திவாரியும், குலாம் நபி ஆசாத்தும் உள்ளனர். இதுதவிர, குடியரசு தினத்திற்கு முன்பாக, குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் விருதை ஒன்றிய அரசு அறிவித்தது, கட்சிக்குள் கருத்து மோதலை ஏற்படுத்தியது. இத்தகைய காரணங்களால் மணீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதே சமயம் ஜி-23 தலைவர்களான ஆனந்த் சர்மா, பூபேந்தர் ஹூடா ஆகியோர் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அபிஜித் முகர்ஜி தனது டிவிட்டரில், ‘நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து மணீஷ் திவாரியை நீக்கியது சோகமான விஷயம். இது போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட நடவடிக்கைகள் காங்கிரசை தேர்தலில் வெற்றி பெற உதவாது’ என கூறினார். இதற்கு பதிலளித்த மணீஷ் திவாரி, ‘‘நான் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால்தான் அது ‘இன்ப அதிர்ச்சி’யாக இருந்திருக்கும். நான் நீக்கப்பட்டதற்கான காரணம் ஒன்றும் பரம ரகசியம் கிடையாது, அது பொதுவாக அனைவரும் அறிந்தது’’ என கூறி உள்ளார். நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.