கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், தனக்குத் தானே டூடுல் வெளியிட்டு, சிறப்பித்துக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1995-ம் ஆண்டு லாரி பேஜூம், செர்கி பிரினும் அறிமுகமாயினர். கணினி சார்ந்து தீவிரத் தேடல் உடைய இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலை.யில் ஆய்வுத் திட்டத்துக்காக மேற்கொண்ட ஆராய்ச்சியில் கூகுள் நிறுவனத்தைத் தொடங்கினர். 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கூகுள் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில், கூகுளைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. நிறுவனத்தை விற்க முயன்றனர். அவர்கள் எதிர்பார்த்த விலைக்கு யாரும் வாங்க முன்வராததால் அந்த முயற்சியைக் கைவிட்டனர். இவ்வாறாக ஆரம்பமான கூகுளின் பயணம், அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது.
கூகுள் மேப், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆன்ட்ராய்ட், யூடியூப் போன்றவற்றை கூகுள் நிறுவனம் வாங்கியது. ஆன்லைன் தொழில்நுட்பங்கள் தவிர்த்து, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பிற துறைகளிலும் மிக முக்கிய முன்னெடுப்புகளை கூகுள் மேற்கொள்ளத் தொடங்கியது. தற்போது தானியங்கி கார், மனித வாழ்நாளை நீட்டிப்பது தொடர்பான ஆராய்ச்சி என கூகுளின் எல்லை விரிந்து வருகிறது.
தினந்தோறும் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட தேடுதல்கள், தங்களின் தேடுபொறியில் மேற்கொள்ளப்படுவதாக கூகுள் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (செப்.27) கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில், கூகுள் தனக்குத் தானே டூடுல் வெளியிட்டுள்ளது.
இதில் அனிமேஷன் செய்யப்பட்ட எழுத்துகள் திரையில் ஒளிர்கின்றன. கேக் மீது பொருத்தப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி, கூகுளின் எழுத்துகளில் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. கேக்கில் உள்ள உருவம் புன்னகைப்பதாக டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது.