சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் வகையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மாலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு; நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிப்.8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சிறப்பு சட்டமன்ற அமர்வு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், அன்றைய தினம், சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படும் என்றார்.
மேலும், இந்த சிறப்பு கூட்டத்தொடர், மக்கள் நலன் சார்ந்து மாணவர் நலனுக்காக நடத்தப்பட உள்ளதாகவும், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று கூறியவர், கூட்டத்தொடருக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கம் போல் கொரோனா பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.