திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது.
கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ந்தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
திருப்பதியில் ஆகாச கங்கை அருகேயுள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் கோவில் விரிவாக்க பணிகளுக்காக வரும் 16-ந்தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது.
கோவிலில் சிதலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும். அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் சீரமைக்கப்படும் என்றார்.
திருப்பதியில் 28,410 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14,831 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.