தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாள் என்பதால் நேற்று வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலில் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் 7வது வார்டில் திமுக வேட்பாளர் ஆனந்தி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக வேட்பாளர் ஆனந்தியை எதிர்த்து அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் போட்டியிடவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.