நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு

ஆம்ஸ்டர்டாம்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் உருமாற்றங்கள் அடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் எச்.ஐ.வி. வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது எச்.ஐ.வி. வைரசின் மிகவும் கொடிய மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு “வி.பி. மாறுபாடு” என்று பெயரிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வகை எச்.ஐ.வி. மாறுபாடு மற்ற வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்களை விட மொத்தத்தில் 3.5 முதல் 5.5 மடங்கு அதிகளவில் தாக்கத்தை கொண்டு இருப்பதாகவும், நோய் எதிர்ப்பு அமைப்பை வேகமாக மங்கி போக வைக்கும் திறனை பெற்று இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனாலும் நவீன சிகிச்சைகள் காரணமாக புதிய எச்.ஐ.வி. மாறுபாடு பற்றி கவலைப்பட தேவையில்லை. வி.பி. மாறுபாடு வைரசால் பாதிக்கப்படும் நபரும் மற்ற எச்.ஐ.வி. வகைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை போலவே குணம் அடைந்து வருகிறார்கள்.

இந்த மாறுபாடு வைரஸ் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் தோன்றி இருக்கலாம். 2010-ம் ஆண்டுகளின் இறுதியில் அதன் பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது.

நம்மிடம் அதிநவீன சிகிச்சை முறைகள் இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரை புதிய வகை எச்.ஐ.வி. மாறுபாட்டால் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.