பர்னாலா,
கொரோனா மூன்றாம் அலை பரவி வருவதை ஒட்டி பஞ்சாப்பில் இம்மாதம் 8ந்தேதி வரை பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளை மீண்டும் வழக்கம்போல திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கினர்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லையெனில் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
பர்னாலா மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியரல்லாத பிற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘பஞ்சாப் உதவி பெறாத பள்ளிகள் சங்கத்தின்’ சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு 9 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அப்படியிருக்கும் போது பள்ளிகளை திறக்கலாமே” என்று தெரிவித்தார்.
இது குறித்து ஒரு மாணவரின் தாயார் கூறுகையில், “குழந்தைகள் செல்போனில் படித்து வருவதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவர்களது கல்வித் தரமும் பாதிக்கப்படுகிறது. தேர்தல் பேரணிகள் உள்ளிட்டவை நடக்கும் போது ஏன் பள்ளிகளை திறக்க கூடாது” என்று கூறினார்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக விரைவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.