பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுதாகரன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சுதாகரனுக்கும் அதே பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சுதாகரன் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பிறகு ஒருநாள் திடீரென மாணவி வீட்டிலிருந்து காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது மாணவியின் பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுதாகரன் உங்களது மகள் என்னுடன் தான் இருக்கிறார் எனவே அவரை தேட வேண்டாம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் விசாரித்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுதாகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.