கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியாக பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களின் கணினிக்குள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியான இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு கூகுள் குரோம் பயன்பாட்டா ளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க, பயன்பாட்டாளர்கள் கூகுள் குரோமை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியாக பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களின் கணினிக்குள் நுழைந்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முடியும். அவர்களின் கணினியை கண்காணிக்கும் வகையிலும், கணினியை செயலிழக்கும் வகையிலும் ஆபத்தான மென்பொருள்களை ஹேக்கர்களால் நிறுவ முடியும். இந்த ஆபத்தை களையும் நோக்கில் கூகுள் நிறுவனம், கூகுள் குரோம் தொடர்பாக புதிய வெர்சனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புதிய வெர்சனில் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், முந்தைய வெர்சனில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய வெர்சனுக்கு மாறுங்கள்
எனவே, கூகுள் குரோம் பயன்பாட்டாளர்கள் தங்கள் கூகுள் குரோம் செயலியை புதியவெர்சனுக்கு அப்டேட் செய்வதன்மூலம் ஹேக்கர்களின் ஊடுருவலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் குரோமின் புதிய வெர்சன் எண்:96.0.4664.93. இது விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களுக்கு கிடைக்கிறது.
எப்படி அப்டேட் செய்வது?
கூகுள் குரோமின் முகப்புப் பக்கத்தில் ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து Help – About Google Chrome செல்லவும். உங்களின் கூகுள் குரோம் புதிய வெர்சனுக்கு தானாகவே அப்டேட் ஆகியிருந்தால், அதில் 96.0.4664.93 என்று புதிய வெர்சனின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இல்லையென்றால், அப்டேட் என்று ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்து உங்கள் கூகுள் குரோமை அப்டேட் செய்து கொள்ளலாம்.