தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் நடத்திய சோதனையில் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஜெய்சங்கர். இவரது வீடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கிருஷ்ணா நகரில் உள்ளது. இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இதன் பேரில், தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கர் வீட்டில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் ஆய்வாளர்கள் சரவணன், பத்மாவதி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். இந்தச் சோதனை சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நீடித்தது.
ஜெய்சங்கருக்கு சொந்தமான தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.5.50 லட்சம் ரொக்கம், 5 வாகனங்களுக்குரிய ஆவணங்கள், வீட்டு ஆவணம் உள்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.