புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக இன்று 344 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். நேற்று 431 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி –224, காரைக்கால்- 74, ஏனாம்- 39, மாஹே- 7 என மொத்தம் 344 (15.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 114 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,516 பேரும் என மொத்தமாக 4,630 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரி பத்மினி நகரைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,947 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. புதிதாக 1,171 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 330 ஆக உள்ளது.
இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 15 லட்சத்து 41 ஆயிரத்து 422 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.