மும்பை: மும்பையில் மூன்று சதவீத விவாகரத்துக்கு காரணம் மாநிலத்தின் டிராஃபிக் மிகுந்த போக்குவரத்து என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி தெரிவித்துள்ளது, வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா பெண் எம்.பி ஒருவரும் அவரை கலாய்த்துள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ். இவர், வங்கியாளராக பணிபுரிந்துகொண்டே சினிமாவில் பாட்டு பாடுவது, அழகுக்கலைத் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியாகவும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை பறிகொடுத்த பிறகு ஆளும் மகா விகாஷ் கூட்டணியையும், சிவசேனா குறித்தும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.
இன்று பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் ஒரு சாதாரண குடிமகனாக இதைச் சொல்கிறேன். மும்பை நகரில் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போது சாலைகள் உள்ள பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதையும், அதனால் டிராஃபிக் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்படுவதையும் பார்க்கிறேன். டிராஃபிக் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை. மும்பையில் 3% விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே திகழ்கின்றன” என்று தெரிவித்தார்.
டிராஃபிக் காரணமாக விவாகரத்து ஏற்படுவதாக அவர் பேசியது வலைதளங்களில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறது. மறுபுறம் சிவசேனாவின் பெண் எம்.பியான பிரியங்கா சதுர்வேதியும் அம்ருதாவின் பேச்சை கிண்டல் செய்யும் பதிவுகளை வெளியிட்டார். அவர் தனது ட்வீட்டில் அம்ருதா பெயரை குறிப்பிடாமல், “3% மும்பைவாசிகள் சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த லாஜிக் விருது வழங்கப்படுகிறது. பெங்களூரு குடும்பங்கள் தயவு செய்து இதைப் படிப்பதைத் தவிர்க்கவும், உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று கலாய்த்திருந்தார்.
அம்ருதா ஃபட்னாவிஸும், “ஏய் பெண்ணே. உண்மைகளை மறைக்காதே, Survey Monkey states என்ற அமைப்பின் சர்வேயில் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் போக்குவரத்து தாமதம் காரணமாக மும்பைவாசிகள் உளவியல் மற்றும் உடலியல் நோய்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது” என்று பிரியங்கா சதுர்வேதிக்கு பதில் கொடுத்துள்ளார். அம்ருதா ஃபட்னாவிஸும் பிரியங்கா சதுர்வேதியும் வாதங்களில் ஈடுபடுவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்பும் பலமுறை இருவரும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.