புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, முன்பு போல் அவரால் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை. அவருடைய இளைய மகன் தேஜஸ்வி யாதவ்தான், கட்சி பொறுப்புகளை இப்போது கவனித்து வருகிறார்.இந்நிலையில், இக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில், கட்சியின் தேசிய தலைவராக லாலுவுக்கு பதிலாக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ‘அப்படி ஒரு திட்டம் எதுவுமில்லை. லாலுவே கட்சித் தலைவராக நீடிப்பார்’ என லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி நேற்று முன்தினம் கூறினார். இந்நிலையில், தலைவர் மாற்றம் குறித்து டெல்லியில் வசித்து வரும் லாலுவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘இது போன்ற செய்திகளை பரப்பி விடுபவர்கள் எல்லாம் முட்டாள்கள். எது நடந்தாலும் அதை பத்திரிகையாளருக்கு சொல்லுவோம்,’ என்றார்.