கடலூர் மாவட்டத்தையொட்டிய புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளான பாகூர், சோரியாங்குப்பம், முள்ளோடை, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் பார்களுடன் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்துவதற்காக கடலூரைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் படையெடுப்பார்கள். அவர்களைக் கவர்வதற்காக இலவச ஆட்டோ மற்றும் டெம்போ சர்வீஸ்களை நடத்துகின்றன அந்த மதுக்கடைகள்.
Also Read: விழுப்புரம்: 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது!
அவர்களில் பலர் செலவு குறைவதற்காகவும், இயற்கை காற்றுடன் மது அருந்துவதற்காகவும் மதுக்கடைகளில் மதுவை வாங்கிக் கொண்டு அங்கிருக்கும் வயல்வெளிகளில் அமர்ந்து விடுவார்கள். போதை தலைக்கேறியதும் அநாகரிகச் செயலில் ஈடுபடும் அவர்களால் பள்ளி மாணவர்கள், விவசாய வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்கள் போன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அந்த மதுக்கடைகளை கடக்கும் பெண்களை ஆபாசமாக வர்ணிக்கும் சில போதை ஆசாமிகள் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்வங்களிலும் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும், காவல்துறையும் அரசியல் தலைவர்களும் அதனை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 63 வயது மூதாட்டி ஒருவர் மணிலா தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த நிலத்திற்கு தலைக்கேறிய மது போதையில் வந்த சுமார் 25 வயது மிக்க இளைஞர் ஒருவர், அந்த மூதாட்டியிடம் அவசரம் என்று கூறி செல்போன் கேட்டிருக்கிறார். மூதாட்டியும் உதவும் எண்ணத்துடன் தனது செல்போனை இளைஞரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அங்கிருந்த கட்டையை எடுத்து அவரின் கழுத்தில் அடித்தார் இளைஞர்.
அந்த தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த மூதாட்டியை அருகில் இருந்த புதருக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அரை மயக்கத்தில் இருந்த அந்த மூதாட்டியிடம், “இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை தேடி வந்து கொலை செய்வேன்” என்று மிரட்டிவிட்டு, அவரின் காதுகளில் அணிந்திருந்த தங்க கம்மல்களை பறித்துக் கொண்டு தப்பித்திருக்கிறார்.
அதையடுத்து வயலுக்கு சென்ற மூதாட்டி வெகு நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர்களும், உறவினர்களும் நிலத்திற்கு சென்று பார்த்தபோது மூதாட்டி அலங்கோலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் பாகூர் காவல் நிலையத்தினர் போதை இளைஞரை தேடி வருகின்றனர்.
Also Read: சென்னை: தனியாக நடந்து சென்ற மூதாட்டி! – இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாகூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “மூதாட்டியை பாலியல் வன்முறை செய்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு அருகேயிருக்கும் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்” என்றும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். அதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அந்த பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடைகளை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் புதுச்சேரி முழுவதும் போராட்டத்தில் குதிப்போம் என்று அதிகாரிகளை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர் போராட்ட பெண்கள்.
நடவடிக்கை எடுக்குமா புதுச்சேரி அரசு…?