புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் முதல்வாரத்தில் முதல் 3 நாட்கள் எந்தவித அமளியும் ஒத்தி வைப்பும் இல்லாமல் பணிகள் 100 சதவீதம் நடந்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவை தலைவர் வெங்கையா நாயுடு, வரும் நாட்களிலும் இதே போன்ற சூழ்நிலை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31 அன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. தொடர்ந்து 1 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதற்காக 12 மணி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 7 மணி நேரம் 41 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது. 26 எம்.பி.,க்கள் பேசியுள்ளனர்.
இந்த தீர்மானம் மீது வரும் செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் பதிலளிக்க உள்ளார்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று பட்ஜெட் விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க உள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மட்டும் ராஜ்யசபாவில் 23 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் இந்த இரண்டு நிகழ்வுகள் தான் முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜ்யசபா செயலகத்தின் அறிக்கைப்படி, முதல்வாரத்தில் முதல் 3 நாட்களில் கேள்வி நேரத்தின் போது 25 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 15 தனிநபர் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நிலுவையில் இருந்த 2 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.
ஒராண்டிற்கு பிறகு, அவை துவங்கிய முதல்வாரத்தின் முதல் 3 நாட்களில் எந்த இடையூறும் இன்றி பணிகள் நடந்துள்ளது.
இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள துணை ஜனாதிபதியும், அவைத்தலைவருமான வெங்கையா நாயுடு, இனி வரும் நாட்களிலும், எதிர்காலத்திலும் இதே உற்சாகத்துடன் அனைத்து எம்.பி.,க்களும் செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
Advertisement