மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் ரயில் மோதலைத் தவிர்க்கும் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
ஒரே வழித்தடத்தில் இரு ரயில்கள் குறிப்பிட்ட தொலைவுக்குள் வரும்போது தானாகவே ரயிலின் இயக்கத்தை நிறுத்தி மோதலைத் தவிர்க்க உதவும் அமைப்பு கவசம் எனப்படுகிறது.
ரயிலின் இயக்கத்தில் மனித தவறுகள், தவறான செயல்பாடுகள் ஆகியன குறித்தும் இந்த அமைப்பு தானாகவே அறிவிக்கும். ரயில்கள் அதிவிரைவாகச் செல்லும்போதும், நிலையப் பகுதிகளிலும், பணிநடைபெறும் தடங்களிலும் மோதல் ஏற்படாமல் தடுக்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நிலையங்களுக்கும், ரயில் எஞ்சின்களுக்கும் இடையே ரேடியோ அலைவரிசைத் தகவல் தொடர்பு, ஜிபிஎஸ் ஆகியவற்றின் உதவியுடன் இந்த அமைப்பு செயல்படும். வரும் நிதியாண்டில் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகளில் கவசம் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக மும்பை சென்ட்ரல் – அகமதாபாத் – ரத்லம் – நாக்தா இடையே 311 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கவசம் அமைப்பு நிறுவப்பட உள்ளது. இதற்கான டெண்டர் இந்த மாதத்திலேயே கோரப்பட உள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.