யாகபூஜை செய்து வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை அம்மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கி விட்டு ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று
பாஜக
தீவிரம் காட்டி வருகிறது.

உத்தரப்பிரதேச தேர்தலில் பல நான்கு முனைப்போட்டி நிலவுவதாக கூறப்பட்டாலும், உண்மையான போட்டி பாஜக-சமாஜ்வாதி இடையேதான் என்கிறார்கள். ஆனாலும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கிறது.

பாஜக ஆளும் மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அம்மாநில முதல்வர்கள் யாரும் தனிப்பட்ட செல்வாக்குடன் இருப்பது அரிது. டெல்லி தலைமை சொல்லும் பணிகளை மட்டுமே செய்யும் நபர்களாகவே இருப்பார்கள். ஆனால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் தனக்கான பிம்பம் கெட்டுபோகாத வண்ணம் செயல்படக் கூடியவர். அதன்படி, தனக்கான செல்வாக்கை உத்தரப்பிரதேசத்தில்
யோகி ஆதித்யநாத்
கட்டமைத்துள்ளார்.

ஆனாலும், அவரிடம் இரண்டு முக்கியமான குறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இந்துத்துவ கொள்கையில் மிகவும் வலுவாக இருப்பவர் யோகி. இதனால் அனைவரின் ஆதரவையும் அவரால் பெறமுடிவதில்லை என்பது ஒன்று. தாகூர் சமூகத்துக்கு தலைவராக தன்னை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டுவதுடன் அவர்கள் சார்ந்த நலத்திட்ட விஷயங்களில் அக்கறை காட்டுகிறார் என்பது மற்றொன்று. இவை குறைகளாக சுட்டிக்காட்டப்பாலும் அதனை தனக்கான பலமாகவே அவர் பார்க்கிறார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கோரக்பூர் ஆலயத்தில் ருத்ராபிஷேகம் மற்றும் யாகபூஜை செய்து தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.