மும்பை:
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் லதா மங்கேஷ்கரை அவரது சகோதரியும் பிரபல பாடகியுமான ஆஷா போஸ்லே, சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் தற்போது லதா மங்கேஷ்கர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறியிப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக, லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரதித் சம்தானி மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், பாடகி லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நடைமுறைகளை அவர் பொறுத்துக் கொள்வதாகவும் கூறினார்.
லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது