ஸ்ரீப்ரியா மகளுக்கு நாளை திருமணம்: லண்டன் வங்கி அதிகாரியை மணக்கிறார்
80களில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் சினேகா.
லண்டனின் சட்டம் படித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சினேகா. தற்போது சினேகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மணமகன் அன்மோல் சர்மா. லண்டனில் இரட்டை எம்பிஏ படித்துள்ள இவர் லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
சினேகாவுக்கும், அன்மோல் சர்மாவுக்கும் நாளை (பிப்ரவரி 6) லண்டனில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டும் விசா நடைமுறைக்கு உதவும் வகையிலும், லண்டனில் பதிவு திருமணம் நடக்கிறது. ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைத்து நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பப்படும். சினேகாவும் அன்மோல் ஷர்மாவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கும் தருணத்தில் அனைவரின் ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறோம். என்று தெரிவித்துள்ளார்.