கடந்த சில வாரங்களாகக் கர்நாடக மாநிலத்தில் புகைந்து கொண்டிருக்கும் ஹிஜாப் விவகாரம், தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. உடுப்பி மாவட்டம், குண்டாப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திடீரென ஒரு மாணவ வட்டம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். அதையடுத்து கல்லூரி நிர்வாகமும் உடனே, “முஸ்லிம் மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்துகொண்டு வரக்கூடாது!” என்று உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிக்கு வந்த 25-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அனுமதி மறுத்து வெளியேற்றியது.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வியின் பாதையில் ஹிஜாப்புக்கு இடையூறு கொண்டு வருவதன் மூலமாக, நம் நாட்டு மகள்களின் எதிர்காலத்தைத் திருடிக் கொண்டிருக்கிறோம். கல்வியின் கடவுளான சரஸ்வதி, அனைவருக்கும் பொதுவாகவே அறிவை தந்திருக்கிறார். அதில் அவர் எந்த பேதமும் பார்க்கவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கர்நாடக பா.ஜ.க பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “பிரிவினை வாதத்தைப் புகுத்தும் வேலையை ராகுல் காந்தி செய்து வருகிறார். கல்வி கற்க ஹிஜாப் அவசியம் என்றால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஹிஜாப் அவசியம் என ஏன் அறிவிக்கவில்லை?” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Also Read: `ஹிஜாப் அணிவது என் உரிமை!’ – அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்றத்தை அணுகிய உடுப்பி கல்லூரி மாணவி