Courtesy: கட்டுரையாசிரியர் – தி. திபாகரன்
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை கிடையாது. தமிழர்களுடைய பிரச்சினை பொருளாதார பிரச்சினை மட்டும்தான். அதனை வருகின்ற புதிய அரசியல் யாப்பின் ஊடாக உறுதி செய்து பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்து விடுவோம்” என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.
இதிலிருந்து இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது.
அந்த அடிப்படையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தினால் இலங்கை அரசுக்கு இருக்கின்ற தடைகளும், நெருக்கடிகளும் என்ன என்பதுபற்றி நோக்குவது அவசியமானது.
எனவே மேற்கூறப்பட்ட கூற்றிலிருந்து இலங்கை அரசாங்கம் முன்வைக்கின்ற புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள்.
இப்போது எதனை உறுதிப்படுத்தி அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே இங்கு சிங்களப் பேரினவாதத்தின் பிரதான நோக்கமும் பிரச்சினையும் 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதுதான்.
ஏனெனில் 13 ஆம் திருத்தச் சட்டம்தான் அந்நிய தலையீட்டினால் உருவாக்கப்பட்ட ஒரு திருத்தச் சட்டமாகும்.
எனவே இலங்கை மீது அந்நிய தலையீட்டை அதுவும் குறிப்பாக இந்திய தலையீட்டு அல்லது மேற்கு உலகத்தின் தலையீட்டையோ ஏற்படுத்தவல்ல. அதனால் தான் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
இன்றைய அரசியல் யாப்பினை மாற்ற வேண்டிய தேவை சிங்கள தேசத்திற்கு ஏன் வந்தது? என்னவெனில் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று 13ஆம் திருத்தச் சட்டம். மற்றையது விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. இந்த இரண்டும் சிங்கள தேசத்திற்கு நன்மை பயக்கக் கூடியது அல்ல.
அது சிங்கள இனவாத பசிக்கு தடைக்கல்லாக இருக்கிறது. இந்த இரண்டையும் ஒழிப்பதன் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கை முழுவதையும் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவினுடைய தொடர்பையும், தலையீட்டையும் முற்றாகத் தடுத்து விட முடியும். அத்தோடு அமெரிக்காவோ அல்லது மேற்குலகமும் சார்ந்த அந்நியத் தலையீடுகளையும் தடுத்துவிட முடியும்.
இதனைப் புரிந்து கொண்டுதான் இந்தியா 13வது திருத்தச் சட்டத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவைப் எதிர்பார்த்து காய்களை நகர்த்த முனைகிறது. அதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.
புவிசார் அரசியலில் 13ஆம் திருத்தச் சட்டமும் அதற்கு மூலாதாரமான இந்திய இலங்கை ஒப்பந்தமும் இந்தியாவுக்கு அவசியமான தேவையாகவும் உள்ளது என்பதும் இங்கு மறுக்கமுடியாத உண்மையே.
ஆனால் சிங்களப் பேரினவாதம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம் தமிழர்களுக்கு என்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கக் கூடாது என்பதிலும், தமிழர்களுக்கு எந்த ஒரு வகையிலும் பிரதேச ரீதியிலான அரசியல் அதிகாரமும் கிடைக்க கூடாது என்பதிலும் உறுதியாக செயற்படுகிறது.
தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினையும் இல்லை, அரசியல் தீர்வு தீர்வும் தேவையில்லை” என்பதும், உள்நாட்டுத் தீர்வு என்பதனை நிலைநிறுத்தி தமிழர்களுக்கு பொருளாதார பிரச்சினை மட்டுமே என வரையறுத்து தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டிய கட்டாயத்தையும் இல்லாமல் செய்துவிட முடியும்.
இந்த 13 வதை இல்லாதொழிப்பது இலகுவான காரியமல்ல.
எனவே அதனை நீக்குவதற்கு தமிழர்களுடைய உதவி தேவைப்படுகிறது. அதற்கு 13ஆம் திருத்தச்சட்டம் தேவையற்றது என தமிழர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களை இதற்கு எதிராகப் போராடவும் தூண்டவேண்டும். தமிழர்கள் போராடினால் அதனை நியாயமானதாக வெளி உலகத்துக்கு காட்டி 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழித்திட முடியும்.
அதற்காகத்தான் அண்மையில் ராஜபக்ச அணியிலிருந்து ஜி. எல். பீரிஸ்வும் , கெஹெலிய ரம்புக்கலவும் “13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் “என ஒரு பொய்யான பரப்புரை ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த சதிகார திட்டத்தின் பின்னணியில் கஜேந்திரகுமார் அணியினர் தற்போது போராடத் தொடங்கிவிட்டனர்.
தை 31ம் திகதி நல்லுார் கிட்டு பூங்காவில் நடத்திய போராட்டம் சிங்கள தேசத்திற்கு மேலும் வலுச்சேர்த்துக் கொடுத்துள்ளது.
இன்றைய விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்கள் பத்துக்கு மேற்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் அவர்கள் மூன்றாவது அரசியல் சக்தியாக விளங்குகிறார்கள்.
எனவே விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை ஒழித்து தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்கு மாற்றுவதன் மூலம் தென்னிலங்கையில் சிதறி வாழும் 60% முஸ்லிம்களின் நாடாளுமன்ற ஆசனங்களை இல்லாதொழிக்க முடியும். அதேவேளை அவர்கள் ஒரு சிங்களக் கட்சியின் கீழ் போட்டியிட்டுத்தான் அங்கு வெற்றி பெறமுடியும்.
எனவே இங்கே முஸ்லீம் தலைமைத்துவம் இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும். அதேவேளை கிழக்கிலும் வடக்கிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் செறிந்து வாழ்கின்ற 40 விகித முஸ்லீம்களால் தொகுதிவாரி தேர்தல் முறையில் அதிகபட்சம் மூன்று நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை மட்டுமே பெறமுடியும் என்பதை சிங்கள தேசம் நன்கு புரிந்து கொண்டுள்ளது.
எனவே தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்களுடைய நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை இதன்மூலம் குறைத்து அரசியல் சக்தியற்றவர்களாக ஆக்க முடியும்.
இத்தகைய அரசியல் சதுரங்க விளையாட்டில் சரியான தீர்வினை மேற்கொண்டு வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி வரலாற்றில் என்றும் மீட்க முடியாத படுபாதாளத்தில் தமிழ் மக்கள் வீழ்த்தப்படுவர். இதனை சர்வதேச ரீதியாக தாய்வான் எதிர்நோக்கும் அரசியல் நெருக்கடியில் இருந்து மேலும் விளங்கிக் கொள்ளமுடியும்.
1945ஆம் ஆண்டு ஐநா சாசனத்தின்படி சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் 1949ஆம் ஆண்டு சீனப் புரட்சியின் போது சீனப் பெரும் நிலப்பரப்பை மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட்கள் கைப்பற்றிக்கொண்டனர். சாங்காய்செக் (Chiang Kai-shek) அரசு 10 லட்சத்துக்கு மேற்பட்ட சீன மக்களுடன் சீன இராணுவ மற்றும் அதிகார மையத்துடன் போமாசா தீவுக்குள் சென்று முடங்கிக் கொண்டது.
அன்று போமாசாதீவின் மொத்த குடித்தொகை ஒன்றரைக் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் மாவோ தலைமையிலான நெஞ்சீனாவில் 100 கோடி மக்கள் இருந்தனர். ஆனால் அரசியல் சாசனத்தின்படி சாங்காய்செக் தலைமையிலான அரசை சீன (Republic of China) அரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் அமெரிக்க சார்ந்த மேற்குலகம் Chiang Kai-shek தலைமையிலான அரசை சீனஅரசு(Republic of China) என பேண வேண்டிய நிலை நீடித்து வந்தது.
ஏனெனில் கம்யூனிசம் உலகில் பரவாமல் தடுப்பதற்கு கம்யூனிஸ்ட் சீனாவை தற்காலிகமாக தடுத்து வைத்திருக்க வேண்டிய தேவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு இருந்தது. இதனல் ஐநா உறுப்புரிமையும் Republic of China என்ற பெயரில் தாய்வான் அரசே பெற்றுக் கொண்டு இருந்தது. அதனால் 1971 ஆம் ஆண்டு வரை செஞ் சீனாவால் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல் வெற்றிகரமாக தடுத்து வைத்திருந்தார்கள் என்பது இங்கே பச்சை உண்மையாகும்.
அதேநேரத்தில் 1970களில் திறந்த பொருளாதாரக் கொள்கையில் பெரும் சந்தை வாய்ப்பை அமெரிக்கா தேடியது. அதற்கு 100 கோடி மக்களைக் கொண்ட செஞ்சீனாவில் பெரும் சந்தைவாய்பு இருந்ததனால் சீனாவுடன் இரகசிய உறவை வளர்ப்பதற்கு அமெரிக்கா முயன்றது.
அதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் சீனாவுக்குவிஜயம் செய்து சீனாவுடனான உறவை பலப்படுத்தி தொடங்கினார். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது.
சோவியத் யூனியனை வீழ்த்துவதற்கு சீனாவை பயன்படுத்த அமெரிக்கா முயன்றது. இந்த அரசியல் சதுரங்கத்தில் தனக்குரிய பாத்திரத்தை சரியாக விளையாட தாய்வான் தலைவராக இருந்த Chiang Kai-shek தவறிவிட்டார். அவர்”ஒரு சீனா தான் “என பேசத் துவங்கினார்.
ஆனால் உண்மையில் Chiang Kai-shek இரண்டு சீன அரசுகள் என்று முடிவெடுத்திருந்தால் இன்று ஐ.நாவில் உறுப்புரிமை உடைய நாடாக தாய்வான் இருந்திருக்கும்.
ஆனால் மாறாக “ஒற்றைச் சீனா” என்ற வறட்டுப் பிடிவாத அரசியல் கைக்கொள்ளப்பட்டதன் விளைவு 1971ஆம் ஆண்டு ஐநா தீர்மானம் 2758 படி உண்மையான சீனாவாக செஞ்சீனாவை (People’s Republic of China) ஐ.நா ஏற்றுக் கொண்டுவிட்டது.
அதன் மூலம் People’s Republic of China தான் உண்மையான சீனாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டமையினால் தாய்வான் தனது ஐ.நா உறுப்புரிமையை இழந்தது. செஞ்சீனா உறுப்புரிமையை பெற்றதோடு மட்டு மல்ல வீட்டோ அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டது.
இவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தாய்வான் பின்னர் அதற்கான தகுதியை இழந்துவிட்டது. தாய்வான் மீண்டும் ஐநாவில் இணைய முடியாதவாறு சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை கையில் கொண்டுள்ளது.
உலகில் 15 நாடுகளின் அங்கீகாரம் தாய்வானுக்கு இருக்கின்ற போதிலும் இன்று தாய்வான் சட்டரீதியாக உலக நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது.
ஆனால் ஜி7 நாடுகள் தாய்வானை ஏற்றுக்கொள்கின்றன. உலகின் பொருளாதாரதர வரியையில் 22வது நிலையில் தாய்வான் உள்ளது.
தொழில்நுட்பத்தில் அதி உச்சம் வளர்ச்சி அடைந்த தாய்வான் இன்று இரண்டரை கோடி மக்களைக் கொண்டுள்ளது.
தாய்வான் கடந்த 74 ஆண்டுகளாக நடைமுறை அரசாக தொழிற்படுகின்றது. ஆனால் சர்வதேச ரீதியாக ஒரு சட்டரீதியான இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
இன்று வரை உலகில் சிறிய 15 நாடுகள் மாத்திரமே அங்கீகரித்துள்ளன.
அதே நேரத்தில் மேற்குலகம் தமது நலன் சார்ந்து சட்டரீதியற்ற விதத்திலேயே தாய்வான் உடன் ஒப்பந்தங்களையும் வர்த்தக உறவுகளையும் கொண்டிருப்பதை காணமுடிகிறது.
எப்போதும் சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கும், மேலாதிக்கத்துக்கும் பயந்து நிலையிலேயே தாய்வான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இல்லையேல் அல்லது இந்த மூன்று நாடுகளும் தாய்வானை கைவிடும்பட்சத்தில் மறு கணத்தில் சீனாவினால் தாய்வான் விழுங்கப்பட்டிட முடியும்.
இத்தகைய ஒரு அபாயகரமான நிலைக்கு இட்டுச் சென்றது சாங்காய்செக் அவர்கள் மேற்கொண்ட முட்டாள்தனமான அரசியல் முடிவுகள்தான் காரணம். இதனால் சர்வதேசரீதியாக தான் இழந்த உரிமையை இப்போது தாய்வான் மீட்க முடியாமல் இருக்கிறது.
இதைப்போன்ற ஒரு ஒத்த நிலைமை இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கும் ஏற்படுவதற்கான சூழல் இப்போது தென்படுவது மிக ஆபத்தானதும், அச்சத்துக்கு உரியதாகும்.
1930ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் சட்ட சீர்திருத்த காலத்திலிருந்து 1987 ஆம் ஆண்டு வரையான 57 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்காக மேற்கொண்ட சாத்வீகப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் , அதனால் சிந்தப்பட்ட இரத்தமும் போராளிகளினதும் மக்களினதும் இழப்புக்களின் விளைவாக பெறப்பட்ட ஒரு அடைவுதான் 13ஆம் திருத்தச் சட்டம் ஆகும். இந்த அடைவு எந்த அரசினது கொடையோ, தானமோ அல்ல. தமிழ் மக்களின் துன்ப துயரங்களுக்கு கிடைத்த ஒரு சிறு பரிசு.
ஆகவே இது இந்திய இலங்கை அரசியல் நலன்களுடன் மாத்திரம் அல்லது அவர்களுடைய சலுகைகள் அல்லது அவருடைய பரிசாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் இரத்தத்திலும் பிணக் குவியல்களின் மீதும் உருவாக்கப்பட்ட ஒரு அற்ப சொற்பமான தீர்வுத்திட்டம்தான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டிய அதேவேளை இதனையும் முட்டாள்தனமாக இழந்துவிடக்கூடாது.
இப்போது இருக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாகாது. ஆனால் அது நல்லதோ, கெட்டதோ, பயனுடையதோ, பயனற்றதோ எப்படி இருப்பினும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் சர்வதேச விதிமுறைக்கு உட்பட்ட சர்வதேச அங்கீகாரத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி நேரடியாக இலங்கை- இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் நலன்கள் சார்ந்த பகுதியாக உள்ளது.
அதில் குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் சார்ந்து இலங்கையின் துறைமுகங்களும் நிலப்பகுதியும் வேறு எந்த அந்நிய நாடுகளின் இராணுவ, புலனாய்வுப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கக் கூடாது என்பது பற்றியதாகும்.
அதனை அடுத்து ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியது இரண்டாவது பகுதியாக உள்ளது. இத்தகைய ஒரு சர்வதேச அரசியல் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது தான் 13 ஆம் திருத்தச் சட்டம் ஆகும்.
இந்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அளிக்கக்கூடிய அல்லது தமிழ் மக்களை சிங்கள அரசு அழிப்பதற்கு தடைக்கல்லாக இருக்கக்கூடிய ஒரு துரும்பாக இருக்கின்றது.
அந்த சட்டத்தை இல்லாது ஒழிப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
அதே நேரத்தில் 13ஆம் திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வும் கிடையாது. அது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தரப் போவதும் இல்லை. ஆயினும் இன அழிப்புக்கு எதிரான ஒரு குறைந்தபட்ச தடைக்கல்லாக உண்டு.
சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு உரிமையையும் அல்லது குறைந்தபட்ச சலுகையைதானும் கொடுக்க தயாராக இல்லை. ஆனால் இந்த 13ஆம் திருத்தச் சட்டம் என்பது சிங்களப் பேரினவாதத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக உள்ளது. எனவே இவ்வாறு சிங்களத்தின் தொண்டையில் சிக்கியிருக்கும் இந்த முள்ளானது தமிழர்களுக்கு ஒருவகையில் சாதகமானது.
அதனை அப்படியே வைத்திருப்பதுதான் தமிழர்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பை கொடுக்க வல்லதுமாகும். எனவே சிங்களத்தின் தொண்டையில் சிக்கிய 13 என்கின்ற முள்ளை அகற்றுவதற்கு தமிழர் தரப்பு முயற்சிக்கக் கூடாது. அதனை அகற்றினால் சிங்களப் பேரினவாதம் பெரும் பசிக்கு தமிழ் மக்கள் இரையாக்கப்படுவர்.
சர்வதேச ரீதியிலான சர்வதேச விதிமுறைக்கு உட்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டதை இழந்தால் மீண்டும் அதைப் பெறமுடியாது. எனவே 13 ஆவதை அகற்றுவது என்பது தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதத்திற்கு இரையாக்குகின்ற நண்பனின் வடிவிலான எதிரியின் செயற்பாடாகவே அமையும்.
எனவே இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் அதிகாரத்தையும் கொடுக்கத் தயாரில்லை என்பதுவும் பிரதேச ரீதியாக தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற எந்த பேச்சுக்கும் இடமில்லை என்பதையும் அவர்கள் திட்டவட்டமாக தங்கள் கொள்கை பிரகடனங்களில் வெளியிட்டு விட்டார்கள்.
ஆயுதப் போராட்டத்தின் விளைவால் ஏற்பட்ட, நிர்ப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க சிங்கள தேசம் கங்கணம் கட்டி நிற்கிறது.
அவ்வாறு சிங்கள தேசத்தின் இருப்பை நிறைவேற்றக் கூடிய வகையில் அதற்கு ஆதரவாக 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்கள் தரப்பிலிருந்து யார் எதிர்த்தாலும் அவர்கள் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் கோட்டபாயவின் கட்டளையில் செயற்படுகிறார்கள் என்பது புலனாகின்றது.
எனவே இந்த 13 ஆவதை எதிர்ப்பவர்கள் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
13ஆவது திருத்தத்தை எதிர்த்து அதனை நீக்க வேண்டும் என்று கூறுவதைவிட தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்று கோரி, அதாவது சமைக்க வேண்டும் என்று கோரி போராடுவது தான் இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும்.
13ஆம் திருத்தத்தை நீக்காது அதனை மேற்கோள்காட்டி அரசியல் யாப்பில் சமஸ்டி ஆட்சி முறையை உருவாக்க போராட வேண்டுமே தவிர ராஜபக்சக்கள் விரும்புகின்றவாறு 13 ஆம் சட்டத்திருத்தத்தை நீக்குமாறு கோரி போராடுவது ராஜபக்சக்களுக்கும் இன வாதத்திற்கும் செய்யும் சேவையாக அமைவதுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவும் அமைந்துவிடும்.
கட்டுரையாசிரியர் – தி. திபாகரன்