தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட 216 அடி உயர பிராம்மாண்ட ராமானுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உள்ளதாக குறிப்பிட்டார்.
வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் ‘சமத்துவத்திற்கான சிலை’ என்ற பெயரில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள பீடத்தின் மீது ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்து 800 டன் எடையுள்ள இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தாமரை மலர் மேல் ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை கட்டமைக்க 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பீடத்தில் 54 தாமரை இதழ்கள், அவற்றின் கீழ் 36 யானை சிற்பங்கள், 18 சக்கரங்கள், சிலைக்கு அருகில் ஏற 108 படிகள் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெற்ற யாகசாலை பூஜையில் பங்கேற்ற பிரதமர், திருநாமம் சூடி, வேத மந்திரங்களை உச்சரித்து யாகத்தில் பங்கேற்றார்
இதனை தொடர்ந்து, ஆசிரமத்தில் உள்ள திவ்ய தேச கோவில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
பிரம்மாண்டமாக நிறுவப்பட்ட ராமானுஜரின் சிலைக்கு கீழ் இருந்த அவரது சிறிய அளவிலான சிலையை பூஜித்த பிரதமர், சிலை திறப்பிற்கு அடையாளமாக கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சமயப்பணிகளில் தலை சிறந்த ராமானுஜர் வடமொழிக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்டார். இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக திகழ்ந்த ராமானுஜரின் போதனைகள் வடக்கு முதல் தெற்கு வரை அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சமத்துவத்தின் உண்மையான பாதுகாவலராக திகழ்ந்த ராமானுஜர், கோவில்களுக்குள் பிற்படுத்தப்பட்டோரும் நுழைவதை சாத்தியமாக்கியவர் என்றும் பிரதமர் தனது உரையில் புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் முப்பரிமாண காட்சியமைப்புகள் கொண்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.