பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து ஒ.டி.டி.யில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில், கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட்.
பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் எனச் சொல்லப்பட்டாலும், இதுவரைக்கும் முதல் நாள் நடக்கிற நிகழ்வுகளே மறுநாள் ஒளிபரப்பாகி வருவதாகத் தெரிகிறது.
எவிக்ஷனைப் பொறுத்தவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது எலிமினேட் ஆகிறவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியில் வந்து கொண்டிருந்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் கலந்து கொள்ளும் ஷூட்டிங் நடைபெறும். சில நேரங்களில் சனிக்கிழமையே சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள்களுக்குமான எபிசோடுகள் ஷூட் செய்யப்பட்டுவிடும்.
அதே போல் பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வார எவிக்ஷனுக்கான கமல் கலந்து கொள்ளூம் ஷூட்டிங்கும் இன்று (5/2/22) காலை தொடங்கியது. வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டுப் பேர் இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி எவிக்ஷன் ஆகி பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேறி இருக்கிறார்.
சுரேஷ் வெளியேறிய எபிசோடு இன்று இரவே கலெக்ஷன் எபிசோடாக ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டவர். அல்டிமேட்டில் இருந்த கடந்த ஒரு வாரத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் போலவே காணப்பட்டார். இருப்பினும் அவ்வப்போது பல சண்டைகள் அவரை மையப்படுத்தி நடந்தன. பாலாவும் அவரைக் கொளுத்திப் போடுபவராகக் கூறி சண்டை போட்டிருந்தது நினைவிருக்கலாம். முதன் முதலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே தனக்குப் போதுமான புகழைத் தந்துவிட்டதாகப் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.