புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்ற விகிதம்) 7.4% ஆக சரிந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 16% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
1. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரப்படி 12,25,011 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2. கடந்த 24 மணி நேரத்தில், 865 பேர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை கரோனாவால் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
3. கடந்த 24 மணி நேரத்தில் 2,13,246 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நாடு முழுவதும் கரோனா பாதித்து குணமானவர்களின் எண்ணிக்கை 4,04,61,148 என்றளவில் உள்ளது.
4. தினசரி கரோனா பாசிடிவிட்டி விகிதம் என்பது 7.42% ஆக உள்ளது. வாராந்திர கரோனா பாசிடிவிட்டி விகிதம் என்பது 10.20 சதவீதமாக உள்ளது.
5. கடந்த 24 மணி நேரத்தில் 14,48,513 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் இதுவரை 74.01 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
6. இதுவரை 169 கோடி பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் அன்றைய தினம் 42,95,142 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
7. கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில் 1,604 பேருக்கு கரோனா உறுதியானது. 17 பேர் பலியாகினர். அங்கு பாசிடிவிட்டி விகிதம் 2.87%க்கும் கீழ் குறைந்துள்ளது.
8. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,394 பேருக்கு தொற்று உறுதியானது. புதிதாக ஒருவருக்குக் கூட ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
9. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,684 பேருக்கு தொற்று உறுதியானது. 28 பேர் பலியாகினர். நாட்டிலேயே கேரளாவில் தான் தொற்று இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது.
10. அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்ததாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.