ஆன்டிகுவா:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது.ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது. இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ரிவ் 116 பந்தில் 95 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ராஜ் பவா 5 விக்கெட்களையும், மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
எனினும் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ்பாவா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.