வாஷிங்டன்:
அமெரிக்க வல்லரசு நாட்டில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 8 லட்சத்துக்கும் அதிகமான ஒருநாள் பாதிப்புகளுடன் உச்சத்தை தொட்ட ஜனவரி மத்தியில் இருந்து, அங்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் இந்த தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் 49 மாகாணங்களில் தொற்று சற்றே குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஜனவரி மத்தியில் இருந்து 15 சதவீதம் குறைந்து 1.24 லட்சமாக உள்ளது. தினமும் சராசரியாக 2,400-க்கும் அதிகமானோர் இறந்து வருகின்றனர். குறைந்தது, 35 மாகாணங்களில் இறப்பு அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கை நேற்று முன்தினம் 9 லட்சத்தை கடந்துள்ளது. 8 லட்சம் இறப்புகளை பதிவு செய்து 2 மாதங்களுக்குள் மேலும் 1 லட்சம் இறப்புகள் பதிவாகி உள்ளன.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இன்று (நேற்று முன்தினம்) நமது தேசம் மற்றொரு சோகமான மைல்கல்லை எட்டி உள்ளது. 9 லட்சம் உயிர்கள், கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொற்றுநோயின் உணர்ச்சி, உடல் மற்றும் உளவியல் சுமை ஆகியவற்றை தாங்குவது நம்ப முடியாத அளவுக்கு கடினமாக உள்ளது.
எல்லா அமெரிக்கர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இது இலவசம், எளிதானது மற்றும் பயனுள்ளது. உங்கள் உயிரையும் நீங்கள் விரும்புகிறவர்களின் உயிர்களையும் இது காப்பாற்றும்.
25 கோடி பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் காத்துள்ளனர். இதன் விளைவாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை நாம் காப்பாற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள அமெரிக்காவில் 64 சதவீதம் பேர், அதவாது 21 கோடியே 20 லட்சம் பேர் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு விட்டதாக நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.