அயோத்தியில் ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரபலமான பாடகர்கள் பலர் இருந்தாலும், லதா ஜி தான் எனக்கு எப்போதும் பிடித்தமான பாடகர் லதா மங்கேஷ்கர் மட்டும் தான். அவருடன்
நீண்ட நட்பு பாராட்டியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
உத்தரப் பிரதேசத்தில் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி வரை நான் ராம் ரத யாத்திரை மேற்கொள்ளவிருந்தபோது அவர் எனக்கு மிகவும் அழகான ராம பஜனையைப் பாடி அனுப்பினார்.
“ராம் நாம் மெய்ன் ஜாது அய்ஸா, ராம் நாம் பாயீ, மன் கி அயோத்யா தப் தக் சூனி, ஜப் தக் ராம் நா ஆயீ..” என்ற வரிகள் கொண்ட ராமர் பஜனையை அனுப்பினார். அந்த பஜனை தான் எனது ரத யாத்திரையின் அடையாளப் பாடலாக மாறியது என்று கூறியுள்ளார்.
மேலும், லதா மங்கேஷ்கருடன் எப்போது மேடையைப் பகிர நேர்ந்தாலும் தனது வேண்டுகோளை ஏற்று ஜோதி கலாஷ் சல்கே பாடலை லதா மங்கேஷ்கர் பாடுவார் என்றும் அவர் பெருமையுட்ன சுட்டிக் காட்டினார்.
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் என பல அமைச்சர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இன்று வெளியாகவிருந்த தேர்தல் அறிக்கை இன்னொரு நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவா பாஜகவினருடன் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த பிரதமர் மோடி காணொளி ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மும்பைக்குப் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அயோத்தியில் ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.