மறைந்த அரசு பணியாளர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மறைந்த அரசு பணியாளர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை அமைச்சர்
ஜிதேந்திர சிங்
, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு சில வங்கிகள், மறைந்த அரசுப் பணியாளர்களின் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் தருவதில் பல கெடுபிடிகள் செய்வதாக புகார்கள் வந்து உள்ளன. சில வங்கிகள், நீதிமன்றத்தில் இருந்து பாதுகாவலர் சான்று வாங்கி வந்தால் தான், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஓய்வூதியம் தரப்படும் என, நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்படுகிறது. இது, மத்திய அரசு சேவை சார்ந்த ஓய்வூதிய சட்டத்திற்கு எதிரானது. வாரிசு நியமன நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.
எனவே, மறைந்த அரசுப் பணியாளர் யாரை வாரிசுதாரராக நியமித்து உள்ளாரோ, அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, குடும்ப ஓய்வூதியம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்துடன், பாதுகாவலர் சான்றிதழ் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான உத்தரவை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு பிறப்பிக்கும்படி, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.