பயனர்களிடம் கிடைத்த மிகச் சுமாரான வரவேற்பைத் தொடர்ந்து ஃப்ளீட்ஸ் வசதியை ட்விட்டர் நிறுவனம் ஆகஸ்ட் 3 முதல் நீக்கவுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஃப்ளீட்ஸ் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ட்வீட் செய்வது மட்டுமல்லாமல், 24 மணி நேரம் மட்டுமே தோன்றும் ட்வீட்டுகளை/ தகவல்களை/ இணைப்புகளை இதில் பகிரலாம். ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் ஸ்டோரி/ ஸ்டேட்டஸ் வசதிக்கு இணையாக இது அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், வெர்டிகல் வடிவில் பகிர்வு, முழு திரையிலும் தோன்றும் விளம்பரங்கள் என இந்த ஃப்ளீட்டில் இன்னும் சில புதிய விஷயங்களையும் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
ஆனால், இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. “நாங்கள் ஃப்ளீட்ஸை அறிமுகம் செய்த சமயத்திலிருந்தே நாங்கள் நம்பிய அளவுக்கு அந்த வசதியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. ஃப்ளீட்ஸ் மூலமான ட்விட்டர் உரையாடல் பயனர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்” என்று ட்விட்டரின் துணைத் தலைவர் இல்யா ப்ரவுன் கூறியுள்ளார்.
ட்விட்டரின் அதிகாரபூர்வ பக்கத்தில், “ஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸை நீக்குகிறோம். புதிதான சில அம்சங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மன்னித்துவிடுங்கள் அல்லது உங்கள் வரவேற்புக்கு நன்றி” என்று ட்வீட் பகிரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 முதல் ஃப்ளீட்ஸ் இருந்த இடத்தில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்பேசஸ் என்கிற ஒலி சார் உரையாடலை ஆரம்பிப்பதற்கான தேர்வே இடம்பெற்றிருக்கும்.