வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஆடியோ செய்தி ஒலிபரப்பாகும் வேகத்தை 1 மடங்கு, 1.5 மடங்கு என அதிகபட்சமாக 2 மடங்கு வரை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆடியோ செய்தி ப்ளே ஆக ஆரம்பித்தவுடன், செய்தியின் வலது ஓரத்தில் இதைக் கட்டுப்படுத்தும் பொத்தான் தோன்றும். அதைத் தொட்டு வேகத்தை அதிகரிக்கலாம்.
2.21.9.15 ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் 2.21.100 ஐபோன் வெர்ஷனைக் கொண்டிருக்கும் பயனர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளிகளுடன் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனாளிகளும் புதிய ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன் 2.119.6 ஆக இருக்கும்போது இதைப் பயன்படுத்த முடியும்.
முன்னதாக குழுக்களில் நமது செய்திக்கு யாராவது பதிலளிக்கும் போது, அதைக் குறிப்பிட “@” என்ற சின்னத்தை அண்மையில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.