புதுடெல்லி: இன்றைய இந்தியா ஒரு ராஜாவால் வழிநடத்தப்படுகிறது, அவர் யாருடைய பேச்சையும் கேட்க தயாரில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் சில ஊடகங்கள், பாஜக சற்று முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர், கிச்சா மண்டியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
முன்பு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இருந்தபோது இந்தியா நாட்டின் பிரதமரால் வழிநடத்தப்பட்டது, ஆனால் இன்றைய இந்தியா ஒரு ராஜாவால் வழிநடத்தப்படுகிறது, அவர் முடிவுகளை எடுக்கிறார். யாருடைய பேச்சையும் அவர் கேட்கவில்லை. யாருடைய ஆலோசனைகளையும் கேட்க அவர் தயாரில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.