ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக வலைதளங்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவர அரசு தயார் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சமூக வலைதளங்கள் மீது மத்திய அரசுபுதிய கட்டுப்பாடுகளை விதித்தது. கருத்து சுதந்திரத்தைபறிக்கவே மத்திய அரசு சமூகவலைதளங்கள் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் கூறும்போது, ‘‘சமூகவலைதளங்களை பொறுப்புமிக்க தாக மாற்றும் நோக்கில் அரசு விதிகளைக் கொண்டுவந்தால், அது கருத்து சுதந்திரத்தை முடக்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. சமூக வலைதளங்கள் இன்று நம்முடைய வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.
அது தவறாக பயன்படுத்தப் படுவதை தடுக்க வேண்டும். நம் நாட்டு மக்களைப் பாதுகாக்க, சமூக வலைதளங்கள் மீது கூடுதல்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். நம் பெண்களின் பாதுகாப்புக்கு சமூக வலைதளங்களைபொறுப்புமிக்கதாக மாற்றுவது அவசியம். அதற்கான முயற்சிகளைத்தான் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசு தயாராக உள்ளது’’ என்றார்.-பிடிஐ