‛குயின் ஆப் மெலடி' – லதா மங்கேஷ்கரின் திரையிசை பயணம்

‛‛நைட்டிங்கேள் ஆப் இந்தியா, குயின் ஆப் மெலடி, வாய்ஸ் ஆப் தி நேஷன்'' என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆன பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று(பிப்., 6) மறைந்தார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார். திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் லதா மங்கேஷ்கர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம்….

1929ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பண்டிட் தீனாநாத் மங்ஷே்கர் – ஷெவந்தி மங்கேஷ்கர் ஆகியோரின் மகளாக பிறந்தார் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா மங்கேஷ்கர். பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் தனது ஐந்தாவது வயதிலேயே இசையை தனது தந்தையிடமிருந்தே கற்க ஆரம்பித்தார். இவரது தந்தை தேர்ந்த பாடகராகவும், நாடக நடிகராகவும் இருந்ததால் அவரது இசை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். அமாநத் கான், பண்டிட் துளசிதாஸ் ஷர்மா மற்றும் அமான் அலி கான் சாஹிப் ஆகியோரிடமும் பாரம்பரிய இசையை முறைப்படி கற்றார்.

முதல் வாய்ப்பு
பள்ளிக்கு சென்று முறையான கல்வி பெறாத லதா மங்கேஷ்கர், சிறு வயதிலேயே பிரபல பாடகர் கே.எல்.சைகலிடம் இசையால் ஈர்க்கப்பட்டார். 1942ல் இவரது தந்தை காலமான பிறகு, 13 வயதே நிரம்பிய இவருக்கு இவரது குடும்ப நண்பரான மாஸ்டர் வினாயக், தனது 'நவ்யுக் சித்ரபட் மூவி கம்பெனி' சார்பில் 1942ல் எடுக்கப்பட்ட “பஹிலி மங்கலா கர்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பளித்தார். இதன் பிறகு 1943ல் “கஜாபாவ்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் மாதா ஏக் சபூத் கி துனியா பதல் தே து என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் ஹிந்தி பாடலாக அமைந்தது.

77 ஆண்டுகள்
1948ல் குலாம் ஹைதர் இசையில் வெளிவந்த “மஜ்பூர்” திரைப்படமே அவரது திரையிசை வாழ்க்கையில் ஒரு திருப்புமனையை ஏற்படுத்தியது. பின்னர் 1949ல் அசோக் குமார், மதுபாலா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான “மஹல்” திரைப்படத்தில் இவர் பாடிய “ஆயேகா ஆயேகா” என்ற பாடல் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது. இதனைத் தொடர்ந்து “பர்ஸாத்”, “தீதார்”, “பைஜு பாவ்ரா”, “அமர்”, உரன் கட்டோலா, “ஸ்ரீ 420”, “தேவ்தாஸ்”, “சோரி சோரி”, “மதர் இந்தியா” என 50களிலும், “முகல் ஏ ஆஸம்”, தில் அப்னா அவுர் ப்ரீத் பராய், “பீஸ் ஸால் பாத்”, “கைடு”, “ஜுவல் தீப்”, “வோ கோன் தி?” “மேரா சாயா” என 60களிலும் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் 77 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் லதா மங்கேஷ்கர் என்றால் அது மிகையன்று.

நவ்ஷத் டூ ஏ.ஆர்.ரஹ்மான்
நவ்ஷத், ஷங்கர் ஜெய்கிஷன், சி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், ஹேமந்த் குமார், ரவி, சலீல் சௌத்ரி, எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், மதன் மோகன்,கல்யாணஜி ஆனந்த்ஜி, ராகேஷ் ரோஷன், ஆனந்த் மிலிந்த், அனுமாலிக், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் பணியாற்றிய பெருமை மிக்கவர். பின்னணி பாடுவதோடு ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும், இசையமைத்தும் இருக்கின்றார்.

கின்னஸ் சாதனை
ஏறக்குறைய 20 இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தனிப்பாடல்களாக 25000 பாடல்கள் வரை பாடியிருக்கின்றார். அதிகமான பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கின்றார்.

இசையமைப்பாளர்
பின்னணி பாடகியாக மட்டுமல்லாது ராம் ராம் பாவ்னே, மராத்தா டிட்டுகா மெல்வாவா, மொஹித்யாஞ்சி மஞ்சுளா, ஸாதி மான்ஸா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர்
பாடகி, இசையமைப்பை தாண்டி வாடல், ஜாஞ்சார், காஞ்சன் கங்கா, லெகின் ஆகிய 4 படங்களை தயாரித்துள்ளார்.

ராஜ்யசபா எம்பி
1999ல் இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசப்பற்று அதிகம்
* 2019ல் தனது 90ஆவது வயதில் “சுகந்த் முஜே இஸ் மீட்டி கி” என்ற பாடலை பாடி அதனை நமது இராணுவ வீரர்களுக்காக அர்பணித்தார்.
* 1963ல் ஜனவரி 26 அன்று தலைநகர் டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய தேசபக்தி பாடலான “ஏ மேரே வதன் கே லோகோன்” என்ற பாடலைக் கேட்டு அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கண்கலங்கினார். 1962ல் நடந்த இந்தியா – சீனா போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்தப் பாடலை அர்பணித்தார் லதா மங்கேஷ்கர்.

ஆல்பங்கள்
* “அல்லா தேரா நாம்”, “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பங்களை பஜனை பாடல்கள் அடங்கிய ஆல்பங்களாக 1961ல் வெளியிட்டார். 1974ல் “மீராபாய் பஜன்ஸ்”, “சான்வரே ரங் ராச்சி” என்ற ஆல்பங்களும், 2007ல் “சாத்கி” என்ற ஆல்பமும், 2012ல் தனது சொந்த பெயரிலேயே ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.

தொண்டு மருத்துவமனை
புனேயில் 800 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையை தனது தந்தை தீனானந்த் மங்கேஷ்கர் பெயரில் ஒரு தொண்டு நிறுவனமாக செயல்படுத்தி வந்தார். 2001ல் இதை மேலும் பெரிதாக விரிவுப்படுத்தினார்.

மறக்க முடியாத தமிழ் பாடல்இளையராஜாவின் இசையில் “ஆனந்த்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆராரோ என்ற பாடலும், “சத்யா” திரைப்படத்;தில் இடம்பெற்ற “வலையோசை கல கல கலவென” என்ற பாடலாலும் தமிழ் ரசிக பெருமக்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் லதா மங்கேஷ்கர்.

எண்ணிலடங்கா விருதுகள்…

பாரத ரத்னா விருது
2001ல் இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
1999ல் ஆண்டு “பத்ம விபூஷன்” விருது
1969ல் “பத்ம பூஷன்” விருது
1989ல் “தாதா சாஹேப் பால்கே விருது
2008ல் இந்தியாவின் 60ஆவது சுதந்திர தினத்தன்று “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

தேசிய விருது
சினிமா துறையில் வழங்கப்படும் தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
* 1972ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “தேசிய விருது” “பரிச்சாய்” என்ற படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
* 1974ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “தேசிய விருது” “கோரா காகஸ்” திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
* 1990ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “தேசிய விருது” “லேகின்” படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.

பிற விருதுகள்
1966ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “மஹாராஷ்டிர மாநில சினிமா விருது” “ஸாதி மான்ஸா” மராத்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1966ல் சிறந்த இசையமைப்பாளருக்கான “மஹாராஷ்டிர மாநில சினிமா விருது” “ஸாதி மான்ஸா” மராத்தி திரைப்படத்திற்காக கிடைக்கப் பெற்றார்.
1977ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “மஹாராஷ்டிர மாநில சினிமா விருது” “ஜெய்த் ரே ஜெய்த்” மராத்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1997ல் “மஹாராஷ்டிரா பூஷன் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2001ல் “மஹாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

1959ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “மதுமதி” திரைப்படத்தில் “ஆஜா ரே பர்தேசி” என்ற பாடலுக்காக வழங்கப்பட்டது.
1963ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “பீஸ் ஸால் பாத்” படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” பாடலுக்காக.
1966ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “காந்தான்” படத்தில் “துமே மேரி மந்திர் துமே மேரி பூஜா” பாடலுக்காக.
1970ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “ஜீனே கி ராஹ்” படத்தில் “ஆப் முஜே அச்சே லக்னே லகே” பாடலுக்காக.
1993ல் “பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி வுரவிக்கப்பட்டார்.
1994ல் “ஹம் ஆப்கே ஹைன் கோன்” படத்தில் “தீதி தேரா தேவர் தீவானா” பாடலுக்காக “சிறப்பு பிலிம் பேர் விருது” வழங்கப்பட்டது.
2004ல் பிலிம் பேர் விருதின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் “சிறப்பு விருதும், தங்கக் கோப்பையும்” வழங்கி கவுரவிக்கப்பட்டார்

6 பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டங்கள், இது போல் இன்னும் ஏராளமான மாநில மற்றும் பிற விருதுகளுக்குச் சொந்தக்காரர் லதா மங்கேஷ்கர்.

லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்தி பாடல்களில் சில…
1. ஆயேகா ஆயேகா ஆயேகா – மஹல்
2. பியார் கியா தோ டர்னா க்யா – முகல் ஏ ஆஸம்
3. ஹவா மே உடுதா ஜாயே – பர்ஸாத்
4. பன்ச்சி பனூ உடுத்தி பிரூன் – சோரி சோரி
5. அஜீப் தாஸ்தான் ஹைன் ஏ… – தில் அப்னா அவுர் ப்ரீத் பராய்
6. கஹின் தீப் ஜலே கஹின் தில் – பீஸ் ஸால் பாத்
7. ஆஜ் பிர் ஜீனே கி தமன்னா ஹே – கைடு
8. ருலாகே கயா சப்னா மேரா – ஜுவல் தீப்
9. ஆப் கி நஜ்ரோனே சம்ஜா – அன்பத்
10. லக் ஜா கலே – வோ கௌன் தி?
11. து ஜஹான் ஜஹான் சலேகா – மேரா சாயா
12. ச்சலோ ஸஜ்னா ஜஹான் தக் – மேரா ஹம்தம் மேரா தோஸ்த்
13. ரங்கீலா ரே தேரே ரங் மே – பிரேம் பூஜாரி
14. கில்தே ஹைன் குல் யஹான் – ஷர்மிலி
15. தஸ்வீர் தேரே தில் மே – மாயா
16. மில்தி ஹே ஜிந்தகி மே மொஹபத் கபி கபி – ஆங்க்கேன்
17. பேதர்தி பால்மா துஜ்கோ மேரா மன் – ஆர்ஜு
18. கும்நாம் ஹே கோயி – கும்நாம்
19. பர்தேசியோ ஸே நா அக்கியா மிலானா – ஜப் ஜப் பூல் கிலே
20. ஜியா ஓ… ஜியா ஓ ஜியா குச் போல் தோ – ஜப் பியார் கிஸிஸே ஹோதா ஹே
21. எஹஸான் தேரா ஹோகா – ஜங்லி
22. தில் தீவானா பின் சஜ்னா கே – மைனே பியார் கியா
23. மாயே நி மாயே – ஹம் ஆப் கே ஹைன் கோன்
24. மேரே க்வாபோ மே – தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
25. ஸோ கயே ஹே – ஸூபைதா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.