முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கத் தங்களுக்கு 8 வாரங்கள் தேவை என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, 2 நாட்களில் ட்விட்டர் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. அதற்கு ட்விட்டர் பதிலளிக்காததை அடுத்து, ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
பலகட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்கி ட்விட்டர் நிறுவனம், தர்மேந்திர சாதுர் என்பவரை இந்திய அளவிலான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே திடீரென அவர் ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம், தனது சர்வதேச சட்டக் கொள்கை இயக்குநரும் அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ஜெர்மி கெசல் என்பவரை இந்தியக் குறைதீர்ப்பு அதிகாரியாக தற்காலிகமாக நியமித்தது. இந்திய விதிகளின்படி இந்தியக் குடிமகனே இந்தப் பொறுப்பை வகிக்க முடியும் என்பதால், அந்த நியமனம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில், ட்விட்டர் நிறுவனம் மீது இந்தியாவைச் சேர்ந்த பயனாளர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா, ”குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு காலம்தான் எடுத்துக் கொள்வீர்கள்? எங்கள் நாட்டில் உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்குக் காலத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று ட்விட்டர் நினைத்தால், அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த ட்விட்டர் நிறுவனம், ”முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க எங்களுக்கு 8 வாரங்கள் தேவை. ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியாவைச் சேர்ந்த நபரை இடைக்காலத் தலைமை குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம். குறைதீர்ப்பு குறித்த முதல்கட்ட அறிக்கையை ஜூலை 11-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, தங்களுக்கு வேண்டிய கால அவகாசம் குறித்து இரண்டு நாட்களில் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.